தங்கத் தமிழ்தாத்தா -நவாலியூர் சோம சுந்தர புலவர்


தங்கத் தமிழ்தாத்தா   


கத்தரித் தொட்டத்து மத்தியில் நின்று

காவல் புரிகின்ற சேவகா

காவல் புரிகின்ற சேவகா

மெத்தக் கவனமாய் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறு யார் -

உன்னைப் போல்

வேலை புரிபவன் வேறு யார்?

தமிழ் மொழியில் எண்ணற்ற பல புலவர்கள் தோன்றியுள்ளார்கள். தம் பாக்களால் தமிழ்த் தாய்க்கு அணிகலன்கள் சூட்டி அழகு பார்த்துள்ளார்கள். தரணி மீது தமிழ் மொழியை தலை நிமிர வைத்துள்ளார்கள். அவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்தான் 'தங்கத் தாத்தா' என அன்பாக அழைக்கப்படும் சோம சுந்தர புலவர்.



சோம சுந்தர புலவர் 1878 ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் நவாலி எனும் ஊரில் பிறந்தார். (அதனால் நவாலியூர் சோம சுந்தர புலவர் எனவும் அழைக்கப்பட்டார்) இளவயதிலேயே தமிழ் மொழி, வடமொழி, ஆங்கில மொழி போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்ற சோம சுந்தர புலவர் தமிழ் மீது ஆரா காதலும் தீரா தேடலும் கொண்டவராக விளங்கினார். அதன் பொருட்டு அரும்பெரும் தமிழ் நூல்களை தேடித் தேடி கற்றார். கோப்பாய், பருத்தித்துறை போன்ற இடங்களில் வாழ்ந்த பண்டிதர்களின் வீடு தேடிச் சென்று தமிழ்த் தாகம் தீர்க்க முயன்றார். ஆசிரியர்களிடம் மாத்திரமின்றி அருமை புத்தகங்களிடமும் மூழ்கி அறிவு முத்துக்களை சேகரித்தார்.

சோம சுந்தர புலவர் ஒரு ஆசிரியராகவும் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களை மாணவர் மனம் விரும்பும் விதத்தில் கற்பிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தனது ஆசிரிய பயணத்தை ஆரம்பித்த அவர் சுமார் நான்கு தசாப்த காலம் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் தமிழை மொழியாக மாத்திரமின்றி வாழ்வியல் பண்பாடாகவும் மாணவர் மனதில் பதிப்பிக்க அயராது பாடுபட்டார்.

சுதேசியம், தேச முன்னேற்றம், சமய விழிப்புணர்வு, மது விலக்கு, சுகாதார நலம் பேணல், பகுத்தறிவின்மை எதிர்ப்பு போன்ற பல்வேறு கருத்துகளை மையப்படுத்தி பாடல்களை யாத்த சோம சுந்தர புலவர் விஷேடமாக சிறுவர் இலக்கியத்தில் கவனம் செலுத்தினார். சிறுவர்களுக்காக பாடப்படும் பாடல்களில் பொதிந்துள்ள விழுமிய கருத்துக்கள் பசுமரத்தாணி போல பதியும் என உளமார நம்பினார். அவர் சிறுவர்களுக்காக இயற்றிய பாடல்களும் அடர்ந்த தாடியுடனான தோற்றமும் சிறுவர்கள் அவரை தங்கத்தாத்தா என்றழைக்க காரணமாக அமைந்தன. 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை !

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே !

கூடிப் பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் !

கொழுக்கட்டை திண்ணலாம் தோழர்களே !

இந்த பாடல் மாத்திரமல்லாது ஆடு கதறியது, எலியும் சேவலும், தாடி அறுந்த வேடன் போன்ற பாடல்கள் இன்றும் நமக்கு சோம சுந்தர புலவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. 

குழந்தைகளின் மனது வெண் பலகை போன்று தூய்மையானது. அந்த மனதில் நாம் பதிக்கும் அறக் கருத்துக்கள் அவர்கள் உயிரோடு வாழும் வரை அவர்களுக்கு வழிகாட்டும். ஆகவே தங்கத் தாத்தா அவர்கள் சிறுவர்களுக்காகவே பல பாடல்களை இயற்றினார். 

கவிதை என்றால் எம்மை களி கொள்ள செய்ய வேண்டும். 'தங்கத் தாத்தா' நாவலியூர் சோம சுந்தர புலவரின் பாடல்களில் இருந்த ஆழமான கருத்துகளும் அழகிய மொழி நடையும் பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவரையும் தம்பால் ஈர்ப்பதில் வெற்றி கண்டன. அவரின் யாப்பமைக்கும் பக்திச் செழுமைக்கும் இந்த பாடல் தக்க உதாரணமாகும்.

அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு சிவாவென வருணீறு பூசி முதிருமன்பால் நெஞ்சம் உருகி விழியருவி முத்துதிர மெய்ப்புகழ மூர உரை குறைப் புதிச செந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப் பொருவில்கந்தா சுகந்தா என்று பாடி கதிரமலை காணாத கண்ணென்ன கண்ணோ பகற்பூரவொளி காணாத கண்ணென்ன கண்ணோ!

தங்கத் தாத்தா தமிழ்மொழிக்கு செய்த சேவைகள் தரணியில் தமிழ் வாழும் மட்டும் மணம் வீசும்.


Comments