phone addiction என்றால் என்ன?

தொலைபேசிகளும் தூரமாகும் சில பொக்கிஷங்களும்



இன்றைய நாளில் தொலைபேசி இல்லாத நிலையை கற்பனையும் செய்துபார்க்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. online வகுப்புக்கள் முதற்கொண்டு பொழுதுபோக்குகள் வரை தொலைபேசி நமது அன்றாட வாழ்வில் அடிப்படை தேவையொன்றாக மாறிக்கொண்டு வருகின்றது. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் விழித்திரை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 60வீதம் அதிகரித்திருப்பதாக மருத்துவ அறிக்கைகள் அலறிக்கொண்டிருக்கின்றன. அதீத தொலைபேசி பாவனை மன அழுத்தம், தூக்கமின்மை, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. தொலைபேசியினால் நாம் எவற்றை இழந்திருக்கின்றோம் என்பதை நாம் நீண்ட காலமாக சிந்தித்துப்பார்க்கவே இல்லை.

தொலைபேசிகளில் நாம் மூழ்கிவிட்ட பின்னர் எமது உறவுகளை விட்டு வெகுதூரம் தொலைந்திருக்கின்றோம். பயனுள்ள புத்தகங்கள், தொலைதூர பயணங்கள், ஆழமான அன்பு கொண்ட உறவுகள், சுவாரஷ;யமான பொழுதுபோக்குகள், குட்டி வீட்டுத்தோட்டம், கவிதைகள், ஓவியங்கள் என பல பொக்கிஷங்களை விட்டு தூரமாகி தொலைபேசியில் தொலைந்துகொண்டிருக்கின்றோம். எங்களை நாங்களே சிறைப்படுத்தி, ஒரு நுனி விரல் தொடுகைக்குள் சிதைந்துகொண்டிருக்கின்றோம்.

வாழ்க்கையின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்காகத்தான் கருவிகளும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தூரத்தில் தொலைந்திருக்கும் உறவுகளை நெருக்கமாக்கத்தான் தொலைபேசியே உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று தொலைபேசி எங்களை உறவுகளுடன் நெருக்கமாக்குகின்றதா? அல்லது உறவுகளை விட்டு தூரமாக்குகின்றதா? என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். 

தொலைபேசி ஒரு கருவிதான். தேவைகளுக்காக மாத்திரம் நாம் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, ஓய்வி கிடைக்கும்போதெல்லாம் அதில் ஒய்யாரமாக நீந்துவது தவறாகும். மாணவப் பருவம் என்பது எங்களை நாங்களே செதுக்கிக்கொள்ள வேண்டிய தருணம். எங்கள் ஆற்றல்களை இனங்கண்டு வளர்க்கவும் எங்கள் உறவுகளை கொண்டாடவும் எங்கள் பாடங்களை மீட்டவும் இறை வழிபாடுகளில் திளைக்கவும் எங்களுக்கு அதிகமான நேரம் தேவைப்படுகின்றது. அந்த நேரத்தை தொ(ல்)லை பேசியில் தொலைப்பது எங்களுக்கு நாங்களே செய்யும் மிகப்பெரும் துரோகமாகும். 





Comments